அரிஸ்டோடில் கூறும் ஆட்சி முறை
அரிஸ்டோடில் கி.மு 384 – கி.மு 322 வரை கிரேக்கத்தில் வாழ்ந்தவர். இவர்வாழ்ந்தக் காலக்கட்டம் தொடர்பாக பல விமர்சனங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் இவர் எதன்ஸ் நகருக்கு அண்மையில் Stagira என்ற ஊரில் கி.மு 384ஆம்; ஆண்டு பிறந்தார். இவரின் நாட்டம் அதிகமாக சமூகத்துறைகளில் காணப்பட்டது. இவர் பிளேட்டோவின் மாணவராக சேர்ந்து அவரின் பள்ளியில் கல்விப் பயின்றார். அரிஸ்டோடில் பிளேட்டோவை பின்பற்றி தனது கருத்துக்களை முன்வைத்தாலும் பல இடங்களில் பிளேட்டோவின் சிந்தனையில் இருந்து விடுபட்டுச் செல்கின்றார். அரிஸ்டோடில் அரசியல்,பொருளாதாரம்,சமூகம்,மெய்யியல் போன்றத்துறைகளை ஆராய்ந்து கருத்துக்கள் தெரிவித்துள்ளார். கிரேக்க சிந்தனையாளராக காணப்படும் இவரின் அனேகமானக் கருத்துக்கள் கிரேக்கத்தை மையமாகக் கொண்டே பின்பற்றப்பட்டது. எனினும் தற்காலப் பொறுத்தப்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் அரிஸ்டோடிலின் கருத்துக்கள் காலம் கடந்தவையாகவே காணப்படுகின்றன. இதனடிப்படையில் அரிஸ்டோடில் கூறும் ஆட்சி முறைகளையும் அதன் தற்காலப் பொருத்தப்பாட்டினையும் பகுப்பாய்வுசெய்து பார்ப்போம்.
அரிஸ்டோடிலை பொறுத்தவரை அவர் 170ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அதில் அவர் எழுதிய 'அரசியல்' என்ற நூல் முக்கியமானதாகும். தனது அரசு பற்றிய கருத்துக்களை கூறும் நூலாக இந்நூல் காணப்படுகின்றது. இவரின் குரத்துப்படி 'மனிதன் ஓர் அரசியல் பிராணி' என்கின்றார். மேலும் இவர் சுமார் 158 அரசியல் யாப்புக்களை பகுப்பாய்வு செய்து அதன் மூலம் பெற்ற அறிவைக் கொண்டு அரசியலயாப்புக்களை வகைப்படுத்தினார். இதனை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி முறைகளையும் வகைப்படுத்திக் காட்டினார். இவ்வகைப்பாட்டில் முக்கிய இரண்டு அம்சங்கள் காணப்படுகின்றன, ஒன்று அதிகாரத்தை வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை இரண்டாவது அரசின் இயல்பு என்பனவாகும்.
இவர் 'அரசியல்' என்ற நூலில் அரசுப்பற்றிக் குறிப்பிடுவதைவிட அவர் இலட்சிய அரசு என்பதனை உருவாக்கி காட்டுவதற்கோ அரசியல் தத்துவம் ஒன்றினை உருவாக்கி காட்டுவதற்கோ முற்பட வில்லை. அரசியல் யாப்புக்களை ஆராய்ந்து அரசின் குறைப்பாடுகளை எடுத்துக்காட்டி அவற்றினை நிவர்த்தி செய்வதற்காக என்ன செய்யலாம்? நிவர்தி செய்வதற்கான வழியினை அரசு எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும். போன்ற அறிவுரைகளாக 'அரசியல்' என்ற நூலினை எழுதியிருக்கின்றார்.
அரிஸ்டோடில் குறிப்பிடுகின்றார் சமுதாய ஒழுங்குப்படுத்தல்கள்தான் மனிதனுக்கு நற்பண்புகளை புகட்டவேண்டும் இல்லாவிட்டால் மனிதன் விலங்கினங்களுள் மிகவும் மோசமான விலங்காக மாறிவிடுவான் என்கின்றார். இவ்வாறு மனிதனை சட்டத்தினூடக கட்டுப்படுத்த ஓர் அரசு அவசியமானதாகும். அரசு என்பது குடும்ப அமைப்பின் வளர்ச்சியாகும் என அவர் குறிப்பிடுகின்றார். அதாவது குடும்பம் விருத்தியடைந்து குலமாக மாறி குலங்கள் விருத்தியடைந்து சமூகங்களாக மாற்றமடைந்து பின்னர் அவை கிராமம் நகரங்களாக வளர்ச்சியடைந்து நகர அரசுகளாக மாற்றமடைந்தன என அவர் குறிப்பிடுகின்றார். இதனூடாக அவர் அரசு என்பது சிறிய அலகில் இருந்தே தோற்றம் பெற்றதாகும் என்கின்றார். குடும்பத்திலிருந்து அரசு தோன்றினாலும் ஒரு வீட்டில் முதன்மை வகிப்பது ஆண்கள் என்ற அடிப்படையில் அரசிலும் அரச செயற்பாடுகளிலும் பங்குக்கொள்வது ஆண்களாகவே இருக்க வேண்டும். பெண்கள் அடிமைகள் அவர்கள் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள். இதனால் பெண்கள் அரசியலில் ஈடுப்பட தகுதியற்றோர் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு ஆண்களே ஆளத்தகுதியுடையோர் என்று கூறும் அரிஸ்டோடில் ஆட்சி முறைகளை வகைப்படுத்தி காட்டினார். இவரின் வகைப்பாட்டில் இரண்டு விதமான தன்மைகள் காணப்பட்டது. ஒன்று அதிகாரத்தை வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை இரண்டாவது அரசின் இயல்பு.
ஆள்வோரின் எண்ணிக்கை நல்லாட்சி தீயாட்சி
ஒருவர் மன்னராட்சி வல்லாட்சி
சிலர் உயர் குடியாட்சி சிறு குழுவாட்சி
பலர் மிதமான குடியாட்சி மக்களாட்சி
மேற்குறிப்பிட்ட பாகுப்பாட்டினடிப்படையில் ஆளுவோரின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அவை நல்லவையாகவும் தீமையாகவும் அமையும் சந்தர்பங்களை எடுத்துக்காட்டி
விளக்குகின்றார். இங்கு இவர் குறிப்பிடும் ஒருவராட்சியானது
மனித சமூகமானது தோன்றிய காலக்கட்டத்தில் அவர்களை ஆட்சி செய்வதற்கு ஒருவர் தேவைப்பட்டான் அவனே மன்னாக காணப்பட்டான். மன்னராட்சியில் மன்னனானவன் நீதியாகவும் நேர்மையாகவும் பொதுநல நோக்கிலும் செயற்படும் போது அவ்வாட்சியானது சிறப்பானதாக அமையும். இம்மன்னராட்சியில் நீதி நேர்மை அற்றுப்போய் அநீதியான செயல்கள் இடம் பெறும்போது வல்லாட்சியாக மறுகின்றது என்று குறிப்பிடுகின்றார்.
இவ்வாறாக வல்லாட்சி நிலைப்பெறும் போது மக்கள் அடிமைகளாக காணப்படுவார்கள். பின்னர் மக்கள் தம்மை அடிமைத்தலையிலிருந்து மீட்பதற்கு சிறு குழுக்களாக மாறி ஆட்சியை மாற்றி சிறு குழுக்களின் ஆட்சியை கொண்வவருவார்கள். இது ஆரம்பத்தில் உயர் குடியாட்சி பண்பை கொண்டிருக்கும். அவ்வாறு காணப்படுமிடத்து அது நன்மையானதாக காணப்படும். பின்னர் உயர் குடியாட்சிக்குள் தோன்றும் சில முரண்பாடுகளினால் பிரபுக்களின் ஆட்சி ஏற்பட்டு அது சிறு குழுவாட்சியாக மாற்றமடையும். அது தீமையானதாக அமைந்துவிடும்.
இவ்வாறு பிரபுக்களின் ஆட்சியில் ஊழல் அதிகரிக்க அதனைமாற்றும் நோக்கில் பல மக்கள் இணைந்து அதனை மாற்ற முட்படுவர் இது பலராட்சியாக மாற்றமடைந்து முதலில் மிதமான குடியாட்சியாக காணப்படும். பின்னர் குடியாட்சியில் ஏற்படும் குலப்பம் காரணமாக மக்களாட்சி ஏற்படும் இது சிறப்பானதாக அமையாது என்று கூறுகின்றார். அரிஸ்டோடில் மக்கள் அனைவரும் ஆளுவதற்கு ஏற்றவர்களல்ல என்கின்றார். இவ்வாறு தனது ஆட்சி முறைபற்றி குறிப்பிடும் அரிஸ்டோடில் அறிவுடையோரே ஆளுதல் வேண்டும் அறிவற்றோர் அடக்கி ஆளப்படுதல் வேண்டும் என கருதுகின்றார். அறிவு என்பது பிறப்பினாலே ஏற்படும் ஒன்று எனக்கருதும் அரிஸ்டோடில் அறிவற்றோர் ஆளுவதற்கு தகுதியற்றோர் என்று குறிப்பிடுகின்றார். அறிவற்றோர் அடங்கிச் செல்ல மறுக்கின்றபோது அவர்களுக்கு எதிராக அறிவுடைய வர்க்கம்
போர் செய்ய வேண்டும் என்கின்றார். இவ்வாறு அரிஸ்டோடில் கூறும் கருத்துக்களை தற்காலத்துடன் தொடர்பு படுத்தி பார்ப்போம்.
அரிஸ்டோடில் குறிப்பிடும் ஆடசியாளரின் எண்ணிக்கையையும் அதன் தன்மையினையும் பொருத்து நன்மையானவை தீமையானவை என வகைப்படுத்திக் காட்டுகின்றார் ஆனால் தற்காலத்தை பொருத்தவரை உலக நாடகள் அனேகமாக ஜனநாயக ஆட்சிமறையையே பின்பற்றுகின்றன. இதனடிப்படையில் தற்கால உலகில் ஆட்சிமுறையானது ஜனாதிபதித்துவ ஆட்சி, மந்திரிசபை அட்சி முறை, கலப்பு ஆட்சி முறை, கூட்டுக்குழு ஆட்சி முறை என்பனவே காணப்படகின்றன. இதற்கு உதாரணமாக முறையே ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ்சர்லாந்து என்பவற்றை குறிப்பிடலாம். இதனுடன் ஒருவராட்சி, சிலராட்சி, பலராட்சி அதன் நன்மை தீமை என்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவராட்சிக்கு இடமே இல்லை எனலாம். ஏனெனில் மக்கள் அனைவரும் கூடி தங்களுக்கான ஆடசியை தாங்களே அமைத்துக் கொள்கின்றனர். இதுவே ஜனநாயகமாகும். இதன் போது தனிநபர் ஒருவரின் ஆட்சியின் கீழ் மக்கள் அடங்கி ஒடுங்கி காணப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும்.
அரிஸ்டோடில் குறிப்பிடுவது போன்று ஒருவராட்சியில் மன்னராட்சி நல்லாலட்சியாயினும் அது வரலாற்றுக் காலங்களில் தோல்வியுற்ற ஓன்றாகவே காணப்படுகின்றது. அனேகமான மன்னர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் அதனை வல்லாட்சியாகவே பயன் படுத்தினர். இதனால் மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டனர். குறிப்பாக 16ஆம் லூய் மன்னனுக்கு எதிரான போராட்டத்தை குறிப்பிடலாம். பிரித்தானியாவை பொருத்தவரை படிபடியாக மன்னனின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்னத்திடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும் இன்றும் சில நாடுகள் மன்னராட்சி முறையை நடைமுறையில் கொண்டள்ளன. அதற்கு உதாரணமாக பிரித்தானியா, ஜப்பான் போன்றவற்றை குறிப்பிடலாம். ஆனால் அரிஸ்டோடில் குறிப்பிடவது போன்று அதிகாரம் மிக்க மன்னராட்சி என்று குறிப்பிட முடியாது. பெயரளவிலேயே மன்னராட்சி காணப்படுகின்றது எனலாம். அதுவும் சம்பிரதாய கடமைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது.
அவர் குறிப்பிடும் வல்லாட்சியை பொருத்தவரை இன்றைய உலகில் அவ்வாறு தோன்றுவது குறைவாகவே காணப்படுகின்றது எனலாம். காரணம் அனேகமான நாடுகள் அரசியல் யாப்புக்களைக் கொண்டு காணப்படுகின்றன. ஆனாலும் அதையும் தாண்டி சிலசந்தர்ப்பங்களில் இவ்வாரன வல்லாட்சிமுறை தோற்றம் பெற்றுவிடுவதுண்டு. பின்னர் மக்கள் இதனையெதிர்த்து போராடவேண்டியுள்ளது. இதற்கு உதாரணமாக லிப்யாவை குறிப்பிடலாம்.
அரிஸ்டோடில் குறிப்பிடும் சிலராட்சியில் மிதமான குடியாட்சியை இன்று காண்பது கடினமாக உள்ளது. மிதமான குடியாட்சி என்று அவர் குறிப்பிடுவது நல்லாட்சியாக காணப்படும் என்கின்றார். அதன் நடைமுறையினை காண்பது கடினம். இருப்பினும் இன்றும் சில நாடுகள் இவ்வாரான ஆட்சிமுறைக்கு மறைமுகமாக உட்பட்டிருக்கின்றுது
எனலாம். குறிப்பாக ஆட்சியில் இருப்போரின் குடிகள் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு போகும் போது அங்கு உயர் குடியாட்சி போக்கே காணப்படும். இருந்தாலும் இதனை நன்மையானதாக கருத முடியாது. இருப்பினும் இது நடைமுறைக்கு சாத்தியமாகத ஒன்று ஏனெனில் காலத்துக்கு காலம் ஏற்படும் தேர்தலின் மூலம் ஆட்சியை மாற்றக் கூடியதாக இருக்கும்.
சிறு குழுவாட்சியை பொருத்தவரை நேரடியாக அதன் தன்மையை காண முடியாவிட்டாலும் இன்றைய ஜனநாயக நாடுகளிலும் மறைமகமாக இது தனது தாக்கத்தை செலுத்துகின்றது எனலாம். அதாவது தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்டே ஆட்சி நடாத்தப்படுகின்றது. அங்கு ஒருகுழுவே ஆட்சி கருமங்களில் ஈடுப்படுகின்றது. மீண்டும் அடுத்த தேர்தல் வரும் வரை அக்குழுவே ஆட்சி கருமங்களை செய்கின்றது. இவ்வாறு பார்க்கும் போது அங்கு சிறுகுழுவாட்சியே காணப்படுகின்றது. உண்மையில் இது தீமையானதுதான் இருப்பினும் அக்குழுவானது சர்வதிகாரப் போக்கை பின்பற்றுமானால் அதனை தகர்தெறியக் கூடிய சக்தி மக்களிடமுண்டு.
பலர் ஆட்சியில் ஈடுப்படும் போது அங்கு மிதமக குடியாட்சி நன்மையானதாக காணப்படும் என்கின்றார். ஆனால் இன்றைய நவீன ஜனநாயக முறைக்கு இது சாத்தியப்படாத ஒன்று. மிதமன குடியாட்சி காணப்படுமானால் அங்கு மக்கள் கருத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது. இது மக்களாட்சிக் கோட்பாட்டிற்கு ஏற்றதல்ல. அரிஸ்டோடில் குறிப்படுகின்றார்
மக்களாட்சி (னுநஅழஉசயஉல) தீமையானது என்று. இவ்விடத்தில் அவர் வாழ்ந்த காலசூல்நிலையே கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் 'அறிவுடையோர் மட்டுமே ஆளுதல் வேண்டும் என்றதனடிப்படையில்'
அவர் கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதனால்தான் சிலராட்சியே சிறந்தது என்றும் மக்களாட்சி தீமையானது என்றும் குறிப்பிடுகின்றார். இருப்பினும் சிலராடசியில் அதிகாரங்கள் துஷ’பிரயோகம் செய்யப்படுவதனால் மக்களாட்சியே சிறப்பானது எனலாம். இது அரிஸ்டோடிலுக்குப் பின்னர் நேரடி மக்களாட்சி என்றடிப்படையில் கிரேக்கத்திலும் காணப்பட்டது. மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி முடிவுகளை எடுக்கும் தன்மை காணப்பட்டது. இது பின்னர் இன்றைய நவீன ஜனநாயகமாக மாற்றமடைந்தது.
அரிஸ்டோடில் மக்களாட்சி தீமையானது என்று குறிப்பிடுவதற்கு காரணங்கள் உள்ளன. அதாவது மக்கள் எனும் போது அதில் பெண்கள், அடிமைகள, ஏழைகள், வர்த்தகர், தொழிலாளி போன்றோரும் உள்ளடங்குவர். ஆனால் இவர்கள் அரசியலில் பங்குப்பற்ற தகுதியற்றோர் என்றே அரிஸ்டோடில் கருதுகின்றார். இருப்பினும் இன்றைய உலகில் மக்கள் அனைவரும் அரசியலில் பங்குப்பற்றுகின்றனர். குறிப்பாக அரிஸ்டோடில் குறிப்பிடும் வர்கத்தினர் என்று யரும் புறந்தல்லப்படுவதில்லை. அதிலும் பெண்கள் இன்று அரசியலிலும் அரசியல் செயற்பாட்டிலும் பாரயளவு ஈடுபாடுகாட்டி வருகின்றனர். 'பெண்கள் ஆளப்பிறந்தவர்கள்' என்ற கருத்து இன்று மேலோங்கி காணப்படுவதால் பல துறைகளிலும் அவர்களின் செல்வாக்கு அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக இந்திய ஜனாதிபதி, இலங்கையின் முன்னால் ஜனாதிபதி, ஐக்கிய அமெரிக்காவின் இன்றை ராஜாங்க செயலாளர் போன்றோரை குறிப்பிடலாம். மேலும் அறிவு என்பது கல்வி மற்றும் வாழும் சூழல் என்பவற்றிலும் தங்கியிருக்கின்றது. ஆகவே இங்கு அரிஸ்டோடிலின் கருத்து தோல்வியடைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இருப்பினும் இன்றைய மூன்றாம் உலக நாடுகளில் மக்களாட்சி தோல்வியுற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. ஏனெனில் அரசியல் அறிவு படைத்த மக்கள் குறைவாக காணப்படுகின்றமை, சரியான தலைவர்களை தெரிவு செய்ய முடியாதுள்ளமை, ஆட்சியாளர்களுக்கான போதிய அனுபவம் இல்லாமை போன்ற வற்றை குறிப்பிடலாம். எவ்வாறாயினும் மக்களாட்சியையே அனைவரும் விரும்புகின்றனர் என்பது பொதுவான உண்மை.
மேலும் அரிஸ்டோடில் குறிப்பிடுவது போன்று இன்றைய அரசுகளின் எல்லைகளோ அல்லது சனத்தொகையோ காணப்படுவது சாத்தியமற்ற ஒன்றாகும். இவர் கூறும் வரையரைகள் ஒரு கிராமத்தை நிறுவகிப்பதற்கு ஏற்புடையதே அன்றி ஓர் நாட்டை பொருத்தவரை சாத்தியமற்றதே. இதனோடு இன்று மக்களாட்சி கோட்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடக்கப்பட்டு வருகின்ற வேளையில் அரிஸ்டோடில் குறிப்பிடும் ஆட்சிமுறைகள் சாத்தியமற்ற ஒன்றே. இவர் தான் வாழ்ந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவகையிலேயே தனது கருத்தை முன்வைத்துள்ளார். அகவே ஒப்பிட்டு பார்க்கும் போது இவர் கூறும் ஆட்சி முறையானது தற்காலத்தில் பொருத்தப்பாடு குறைந்ததாகவே உள்ளது.