“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

A/L 1


அரசறிவியலை வரைவிலக்கணப்படுத்துக,


அரசறிவியல் பற்றி ஒரு பொது வரைவிலக்கணம் காணப்படுவதில்லை. சிலர் அதை ஆட்சிக்கலை என்றும், அதிகாரம் பற்றிய கலை என்றும் இன்னும் சிலர் இவை இரண்டையும் கவனத்திலெடுக்கும் பாடம் என்றும் பொருள் கூற முட்படுகின்றனர். இதற்கு மேலதிகமாக அண்மைக்காலத்தில் அரசறிவியல் என்பது அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல் மோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல் தீர்த்தல் என்பவற்றை கவனத்தில் எடுக்கும் பாடம் என்றும் பொருள் கூறப்படுகின்றது. மேற் குறிப்பிட்ட சகல விடயங்களும் இறுதியாக அரசோடு தொடர்பு படுகின்றன என்றும் எந்தவொரு விடயமும் அரசியலில் இருந்து விடுபடுவதில்லை என்றும் அரசை மையமாகக் கொண்டு அவை பல்வேறு திசைகளில் பரவியுள்ள துணைப்பிரிவுகள் என்றும் தெரிகின்றது. இப்பரவலானது அரசு முறையின் வளர்ச்சி அரசின் செயற்பாட்டுபரப்பு, காலத்தின் தேவைக்கேற்ப  மாற்றமுற்றமை என்பனவற்றோடு இணைந்தே இடம்பெற்றுள்ளது.

அரசறிவியல் ஒரு சுதந்திரமான பாடத்துறையாக ஆரம்பமாகிய புராதான கிரேக்க காலத்திலிருந்து உரோமர் மற்றும் மத்தியகாலம் ஈராக நவீனகாலம் வரை அரசறிவியலைக்கற்ற சகலரும் அரசை மையமாகக் கொண்டே அதனை ஆராய்ந்துள்ளனர். அரசு என்றால் என்ன? அது எவ்வாறு தோன்றியது? அரசின் இயல்பு யாது? அரசின் நோக்கங்கள் யாவை? பிரஜைகளுக்கு உச்சமான லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதற்கு அரசு எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற விடயங்களை கற்பதை கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்காலத்தின் ஆரம்ப பகுதிவரை அரசு பற்றி கற்கையே அரசியலாகும் என்ற பழங்கருத்தே அரசறிவியல் பற்றிய பொருள் கூறலாக அமைந்திருந்தது.

தற்காலத்தின் ஆரம்பத்தில் அதிகாரம் பற்றிய கற்கையே அரசறிவியலாகும் என்ற வரைவிலக்கணம் முன்வைக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் தேசிய அரசு முறையின் தோற்றத்தோடு தேசிய அதிகாரமே அரசின் இறுப்பை நிர்ணயிக்கலாயிற்று. அதன் பின்னர் தேசிய அதிகாரத்தைப் பெறுதல் பேணுதல் நடைமுறைப்படுத்துதல் என்ற விடயங்கள் சிலரின் கவனத்திற்கு உட்பட்டது. அவர்கள் அதிகாரவியல் பற்றிய சிந்தனாவாதக்குழுவை சேர்ந்தவர்களாவர். இதன் ஆரம்ப கர்த்தா மாக்கியாவலிலயாவார். அரசு என்பது ஒரு அதிகாரத்தாபனமாகும் என்ற அடிப்படையில் அரசை கற்போரின் கருத்துப்படி அரசறிவியல் என்பது அரசியல் அதிகாரத்தைப் பற்றி கற்கும் பாடமாகும் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டது.

தேசிய அரசு முறைமை சர்வாதிகாரத்தன்மையில் இருந்து விடுபட்டு ஜனநாயக முறையினதாக மாற்றமுற்றதன் பின்பு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் உருவாகிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டியின் காரணமாக அதிகாரவியல் நோக்கில் அரசியலை கவனத்தில் எடுத்தல் மேலும் உறுதியடைந்தது.

இருபதாம் நூற்றாண்டில் உருவாகிய பொதுநல அரசு முறையின் கீழ் மனிதனின் சமூக பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து, அவர்களின் பொது நலனை நிறைவேற்றுவதில் அரசு எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற விடயம் அரசியலில் பிரதான இடத்தைப் பெற்றதோடு பொதுக் கொள்கையின் உருவாக்கம் மற்றும் அவற்றின் நடைமுறை என்ற விடயம் அரசறிவியலில் சேர்ந்துக் கொண்டது. மேலும் அண்மைக்காலத்தில் அரசுகளில் உள்வாரியாகவும் அரசுகளுக்கு இடையிலான உறவுகளின் போதும் ஏற்படும் வெளிவாரியான மோதல்களின் போதும் மோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல் தீர்த்தல் பற்றிய கற்கையும் அரசறிவியலாகும் என்ற கருத்து உருவாகியது.

  இதன்படி கால மாற்றத்தோடு அரசறிவியலின் உள்ளடக்கமும் மாறற்றமுற்றுள்ளது. இதனால் இது பற்றிய ஒரு பொதுவான வரைவிலக்கணத்தை முன்வைத்தல் கடினமானதாகும். எவ்வாறாயினும் இறுதி விளக்கத்தின்படி சகல விடயங்களும் அரசுடன் தொடர்பு படுகின்றன. ஆட்சிக்கலை, அரசியல் அதிகாரம், பொதுக் கொள்கை, மோதல் முகாமைத்துவம் மற்றும் மோதல் தீர்த்தல் போன்ற விடயங்களையும் அரசோடு தொடர்பு படுத்த வேண்டியுள்ளது. அவை அரசோடு இணைந்தவையாகும். அரசியல் என்பது அரசோடு ஆரம்பித்து அரசுடனையே முடிவுறுகின்றது என்று கார்னர் கூறுகின்றார்.

இவ்வாறு அரசறிவியலுக்கான விளக்கங்களை ஓரளவிற்கு ஓர் எல்லைக்கள் அடக்க முடிந்த போதிலும், அரசறிவியல் கல்விக்கு ஒரு தெளிவான வரைவிலக்கணத்தை இலகுவில் வழங்கிவிட முடியாது. நெகிழ்ச்சியற்ற முறையில் திடமான ஒரு விளக்கத்தை அரச அறிவியலக்கு வழங்கவது கடினமான முயற்சியாகவே தென்படுகின்றது. மாறாக தெளிவான முறையில் நெகிழ்ச்சியற்ற வரைவிலக்கணம் ஒன்று வழங்கப்படமாயின் சமூக விஞ்ஞானமான அரசறிவியலின் வளர்ச்சி தடைப்படக் கூடும் என்பது உணரப்பட வேண்டிய ஒன்றாகும். சமூக மாற்றத்திற்கும் நெகிழ்ச்சிக்கும் ஏற்ப அரசறிவியலின் நோக்கங்களும் தன்மைகளும் விளக்கங்களும் மாறுபட்டே செல்லும் என்பதால் அரசறிவியலின் உள்ளடக்கத்தை மிக சரியாக வரையறுப்பது கடினமானதாகும். இருந்தப் போதிலும் ஆள்வோர் - ஆளப்படுவோர் ஆகிய இரு சாராருக்கும் இடையிலான உறவுகளையும் அவை தொடர்பான செயன் முறைகளையும் விளக்க முட்படும் ஒரு கற்கைநெறியே அரசறிவியல் என்று கூறுவது பொருத்தமானதாக அமையக்கூடும்.

A/L