“He who wishes to be obeyed must know how to command” ― Niccolò Machiavelli, The Prince

அரசியல் - பொருளாதாரம் - பல்தேசிய கம்பனிகள்

அரசியல் - பொருளாதாரம் - பல்தேசிய கம்பனிகள்


அறிமுகம்.
தற்போதைய உலகமயமாக்கல் செயற்பாடானது தனியார் கரங்களுக்கான செல்வக்குவிப்பையே தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில்  அதிகம் பேசுப்பொருளாகக் காணப்படுவது இந்த பல்தேசிய கம்பனிகள். இன்று பல அரசுகள் தமது பொருளாதார நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுப்பதில் தோல்விகளைக்கண்டு வருகின்றன. அரசுகளின் பொருளாதாரத்தினை தீர்மானிப்பதில் வெளி சக்திகளின் ஆதிக்கமே இதற்கான காரணம். இதில் பல்தேசிய கம்பனிகள் முக்கியப்பங்கைக் கொண்டுள்ளனநாம் அறிந்தோ அறியாமலோ இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுகின்றோம். நாம் நமது அன்றாட செயற்பாடுகளின் மூலம் இவைகளை ஊக்குவிக்கின்றோம். தேசிய அரசுகளின் இறைமை, தேசிய எல்லைகள் என்பன தகர்த்தெரியப்பட்டு, ஒரு கட்டற்ற சந்தைப்பொருளாதாரம் ஒற்றைமைய உலகப் பொருளாதாரமாக வளர்ந்து வருகின்ற நிலையில் அரசுகள் தமது திட்டமிட்ட பொருளாதார கொள்கைகளைப் பேணமுடியாது போயுள்ளது. இதிலும் மூன்றாம் உலக நாடுகள் முற்றாக பல்தேசிய கம்பனிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிட்டன. தகவல் தொழிநுட்பம், கல்வி, வங்கித்தொழில், வர்த்தகம் என்ப பாரிய வளர்ச்சிக்காணுவதற்கு இவைகளின் பங்களிப்பே காரணம் என்று ஒரு மாயையினை உருவாக்கி விடுகின்றன. எனவே, இதனை கட்டவிழ்த்துப் பார்க்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையானது இவற்றின் சில புள்ளிகளை தொட்டுக்காட்ட விளைகின்றது.
அரசியற் பொருளாதாரம்.

தற்காலப்பொருளாதாரமானது அரசியற் பொருளாதாரமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. ஒரு நாட்டின் அரசியலைப் பொறுத்துத்தான் அந்நாட்டின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகின்றது. அரசியலமைப்பும் அதன் காரணமாக ஏற்படும் சீரான பொருளாதார நிலையும் சேர்ந்துதான், ஒரு நாட்டை வளம்பெற செய்ய முடியும். அரசாங்கத்தின் நிதிக்கொள்கைகள், நாணயமாற்று விகிதங்கள், வட்டி வீதம், வங்கி முறைமை மற்றும் தனியார் பொருளாதாரக் கொள்கை இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தினை தீர்மானிக்கின்றன. எனவே அரசாங்கம் மற்றும் ஆட்சிமுறை என்பவற்றை பொறுத்தே அரசியல் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகின்றது. 1990ம் ஆண்வரை சோவியத் ரஷ்யாவும் அதன் சார்பு நாடுகளும் மூடிய சோசலிச பொருளாதாரத்தினை பின்பற்றி வந்தன. இதேப்போன்று அமெரிக்காவும் அதனது சார்பு நாடுகளும் முதலாளித்துவ திறந்த சந்தைப் பொருளாதாரத்தினை பின்பற்றிவந்தன. ஆனால் 1990ம் ஆண்டிற்குப் பின்னர் சோவியத் தலைமையிலான மூடிய சோசலிசப் பொருளாதாரம் உடைக்கப்பட்டு சந்தைப் பொருளாதாரத்துடன் கூடிய ஒரு கலப்புப்பொருளாதார முறை உருவாக்கப்பட்டது. இச்செயற்பாட்டிற்கு பல காரணிகள் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தன. இதில் பல்தேசிய கம்பனிகளின் வகிப்பங்கு முக்கியமானதாகக் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல்தேசிய கம்பனிகள்.
ஒரு நாட்டில் தலைமையகத்தினைக் கொண்டு ஏனைய நாடுகளில் தமது கிளைகளைப் பரப்பி வர்த்தகத்துறையில் ஈடுபட்டுள்ள கம்பனிகளே பல்தேசிய கம்பனிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவைகளில் பல்வேறுவகைப்பட்ட கம்பனிகள் காணப்படுகின்றன. உதாரணமாக வர்த்தகம், வங்கி, காப்புறுதி போன்றவற்றை குறிப்பிடலாம். வர்த்தக கம்பனிகளிலும் பல்வேறு வகைப்பட்ட கம்பனிகள் தற்போது இயங்கி வருகின்றன. கிழக்கிந்திய வர்த்தக கம்பனியின் தோற்றத்துடன் பல்தேசிய கம்பனிகளின் ஆரம்பத்தினை நோக்குகின்ற போதும், 1970களின் பின்னரே இவற்றின் பெருக்கத்தினை காணக்கூடியதாய் உள்ளது. இவற்றின் பெருக்கத்திற்கு திறந்த சந்தைப்பொருளாதாரமும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையுமே காரணமாக அமைந்தன. மேலும், 1990ம் ஆண்டின் பின்னர் பனிப்போரின் முடிவினைத் தொடர்ந்து பல்தேசிய கம்பனிகளினால் உலக நாடுகள் பலவற்றில் அகல காலூன்றி செயற்பட முடிந்தது.
பல்தேசிய கம்பனிகளின் ஊடுருவல்.

பல்தேசிய கம்பனிகள் பல்வேறு வழிகளில் ஒரு நாட்டிற்குள் ஊடுருவுவதினை அவதானிக்கலாம். எம்மில் யார்தான், பொதி செய்யப்ட்டு வீட்டிற்கே கொண்டுவந்து தரப்படும் பீட்சா போன்ற உணவுகளை வேண்டாம் என்று சொல்பவர்கள்? உள்நாட்டு பானங்களை விட வெளிநாட்டு பானங்களையே நம்மவர்கள் விரும்பி குடிக்கின்றனர். வெளிநாட்டுப் பொருட்களை தேடிச்சென்று பெயரைக் குறிப்பிட்டு வாங்குபவர்கள் பலர் உள்ளனர். இவ்வாறு இருக்கும் போது பல்தேசிய கம்பனிகளின் ஊடுருவலுக்கு தடையேதும் இருக்கப் போகின்றதா? இல்லை. தயாரிக்கப்பட்ட உணவுகளிலும், பொதிசெய்யப்பட்ட உணவுகளிலும் மக்கள் கூடுதலாக தங்கவைக்கப்படுகின்றனர். இன்றைய உலகமானது தொழிநுட்ப மயமாக்ப்பட்டிருப்தால் தொழிநுட்ப செயற்பாடுகளின் மூலம் இந்நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் தம்மை புகுத்திக் கொள்கின்றன. கல்வி நடவடிக்கைகள் முதற்கொண்டு களியாட்டங்கள் வரை இவற்றின் செல்வாக்கினை காண முடிகின்றது. ATM, Shopping cards, Credit cards என்பவற்றின் மூலமும் சலுகைகளை வழங்குவதன் மூலமும் பல்தேசிய கம்பனிகள் தமது செயற்பாட்டினை மக்கள் மத்தியில் பிரபல்யம் படுத்தியுள்ளன.

பல்தேசிய நிறுவனங்கள் பெரும் விளையாட்டுக்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன. விளையாட்டுப்பொருள் உற்பத்தியிலும் விளையாட்டுக் காலங்களுக்குறிய முகிழ் கோலங்களும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. முன்பு காணப்பட்ட சுற்றுலா சமயம் சார்பானதாகக் காணப்பட, இன்றைய சுற்றுலா பல்தேசிய கம்பனிகளுக்கு சார்பானதாகவே காணப்படுகின்றது.

அரசியற் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்.
பல்தேசிய கம்பனிகளுடாக சர்வதேச முதலாளிகள் தேசிய பாட்டாளி மக்களை எவ்வாறு சுரண்டுகின்றனர் என்பதை அன்ரூ கான்டர் பிரான்ங், எப்.எச் கார்டசோ போன்றோர் ஆய்வு செய்துள்ளனர். பல்தேசிய நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வளர்ச்சியில் பன்மை நிலைகளிலும் பன்மைத்தளங்களிலும் முன்னெடுத்து வருகின்றன. இதனால் மூன்றாம் மண்டல நாடுகள் அதாவது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பெரும் பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டுள்ளன. புதிய உலக ஒழுங்கின்படி பல அரசுகளைவிட சக்திவாய்ந்த பல்தேசிய கம்பனிகள் தேசிய எல்லைகளைக்கடந்த வங்கிகள் எடுத்துக்காட்டாக IMF, IBRD போன்ற நிறுவனங்கள் ஊடாக செயற்படுவதினை அவதானிக்கலாம்.

உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு வெயிநாட்டு நிறுவனங்களில் மனிதவலு மாற்றீடாக செய்ப்படுகின்றது. உட்பாச்சல் அதிகரித்து அதனால் ஏற்றுமதி பாதிக்கப்படுகின்றது. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதனால் அடிமட்ட பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகின்றது. பல்தேசிய கம்பனிகளின் மூலம் மூன்றாம் மண்டல நாடுகள் வளர்ச்சி அடைகின்றன எனக் கூறப்பட்டாலும் இது புதிய தொழிற்பிரிவினையை தோற்றுவிக்கின்றது என்பதே உண்மை.

வளரச்சியடைந்து வரும் அல்லது வளர்ச்சி குன்றிய நாடுகளின் விவசாயத்துறையினை நிர்வகிப்பது பல்தேசிய கம்பனிகளே எனலாம். உரம், விதைகள் போன்றவற்றை இறக்குமதி செய்வது இந்த பல்தேசிய நிறுவனங்களே. இறக்குமதி செய்யும் விதைகளைக் கொண்டு மீண்டும் விதைகளை நாட்டில் உற்பத்தி செய்ய முடியாது. இதனால் மீண்டும் விதைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிiலைமை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்நாடுகள் விவசாயத்திற்கும் இக்கம்பனிகளிடம் தங்கியிரக்க வேண்டி ஏற்படுகின்றது. இதனால் இந்நாடுகளின் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றது.

விவசாயத்துறையில் பல்தேசிய கம்பனிகளின் செயற்பாடு பெருகிவருவதனால் விவசாயத்துறை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. இதன்விளைவாக பல நாடுகளின் பொருளாதாரத்தில்  சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பல நாட்களுக்கு பழுதடையாத மரக்கறிகளை உற்பத்தி செய்வது, அதிகமான பூச்சி கொல்லிகள் மற்றும் கிரிமி நாசினிகளின் பயன்பாடு, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள். மேலும் இவை அனைத்திற்கும் இக்கம்பனிகளிடமே தங்கியிருக்க வேண்டிய நிலை போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்வாறான செயற்பாடுகளை எதிர்து இந்தியாவில் நம்மாழ்வார் என்பர் கருத்துக்களை எழுப்பி வந்தமையினை நாம் காணலாம். இச்செயற்பாடுகள் நாட்டின் உற்பத்தித்துறையினை பாதிப்பதால் நாடுகள் தமது பொருளாதாரத்தினை திட்டமிட்டு வழிநடத்த முடியாது போகின்றது.

பல்தேசிய கம்பனிகளின் செயற்பாடுகளினால் மூன்றாம் மண்டல நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றது என்று கூறப்படாலும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் அனைத்து இலாபங்களும் வளர்சியடைந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கே எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனை நாம் பின்வருமாறு பார்க்கலாம்.

பல்தேசிய கம்பனிகளின் மூலம் முதலீட்டு மட்டம், தொழில் மட்டம் என்பன வளர்ச்சி அடைகின்றன. ஆனால் பல்தேசிய கம்பனிகள் பாரி முதலீடுடன் தமது கிளைகளை இந்நாடுகளில் தொடங்கவதில்லை. எதோ கொஞ்சம் முதலீடுடன் ஆரம்பிக்கப்படுகிகன்றது என்பது உண்மையே. ஆனால் அனைத்து முதலீடுகளும் இங்கிருந்து உபரியாக பெறப்பட்டே பெருக்கத்திற்கு உள்ளாகின்றது. அவற்றின் இலாபம் வேறு நாடுகளிற்கு கொண்டுச் செல்லப்படுகின்றது. இதனால் இந்நாடுகளின் செல்வம் சுரண்டப்படுகின்றது.
பல்தேசிய கம்பனிகள் மூலமாக அரசின் தொழில்துறை புதிய தொழிநுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து பெறமுடிகின்றது. இதனால் தொழிற்துறை வருவாயினை பெருக்க முடிகின்றது என்றும் கூறப்படுகின்றது. ஆனால், தொழிற்துறையில் முறையற்ற தொழிநுட்பங்களை புகுத்துவதனால் அரசிற்கு மேலும் செலவுகள் அதிகரிக்கின்றன என்பதே நடைமுறை ரீதியிலான உண்மை.

பல்தேசிய கம்பனிகள் கோரிக்கைகளின் அடிப்படையில் வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு உதவிகளை வழங்க முன்வருகின்றன. இதனால் இந்நாடுகள் அவற்றின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் காணப்படுகின்றன. இவற்றின் கோரிக்கைகள் குறிப்பாக தமது வியாபாரத் தளத்தினை பெருக்குவதாகவே அமைகின்றது.

முடிவுரை
இன்றைய அரசுகள் குறைந்தபட்ச அரசுகளாக மாற்றம் காணுவதால், பொருளாதாரத்தினை திறந்து விடுகின்றன. எனினும், அப்பொருளாதாரத்தின் மூலம் நாடு மீண்டும் சுரண்டப்பட்டு பல்தேசிய கம்பனிகளின்  இலாபம் ஈட்டும் தளமாக மாற்றம் காணுவதை நாம் அவதானிக்கலாம். இன்றைய சூழ்நிலையில் ஒரு நாடு தனித்து தனது பொருளாதாரத்தினை திட்டமிட்டு வழிநடத்த முடியாது என்பது உண்மையானதொன்று. இதனால் சர்வதேசத்தில் தனது சந்தை வாய்ப்புகளை தேடவேண்டிய நிலை ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்பட்டுள்ளது. இது மூன்றாம் உலக நாடுகளுக்கும் பொருந்தும். தமது பொருளாதார தேவைகளை இலகுவாக முன்னெடுக்க இந்நாடுகள் பல்தேசிய கம்பனிகளிடம் தஞ்சம்புக வேண்டிய ஒரு நிலையே காணப்படுகின்றது. இது ஒரு நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதன்று.